Thursday 26 February 2009

சுஜாதா சார்... WE ALL MISS YOU A LOT











நாளை பிப்ரவரி 27. இன்றோடு ஓராண்டாகிறது. நாட்காட்டிகளின் தேதிப்படி. அவர் எப்படி எப்போதும் சுவாரசியமாக இருந்தார் என்கிற ரகசியத்தை அவர் ஒளித்து வைக்கவே இல்லை.


சுஜாதா என்பவர் ஓர் எழுத்தாளராக, வெறுமனே கதை சொல்பவாராக எங்களுக்கு தோன்றவில்லை. அவர் ஓர் இயக்கம்.






தனிப்பட்ட வாழ்க்கையில் அவரது மரணம் எனக்கு எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை எனச் சொல்ல முடியாது










அவரது மரணம் ஒட்டிய மன சஞ்சலத்தைப் பகிர்ந்து கொள்ள முயன்ற போது கிடைத்த நண்பர்கள் அநேகம். மிக்க் சொல்ல வேண்டுமெனில். திரு. தேசிகன். திரு கார்த்திக் சுப்ரமண்யன் எனச் சொல்ல்லாம்

சுஜாதாவிற்கு என்ன நோக்கம் இருந்திருக்க முடியும். இப்படி எல்லாத் தளங்களிலும் கால் பதித்து நடனம் ஆடி, வெற்றிக் கொடி நட்டு..



அப்பல்லோ ஆஸ்பத்திரியில் கொஞ்ச நாள் ஸ்வாதீனமே இல்லாமல் இருந்து விட்டு தேசிகன் ,சிற்றம் சிறுகாலே.. “ என பாசுரம் படிக்க அதைக் கேட்டபடியே கண்மூடி..

இந்த மனுஷனுக்கு என்ன நோக்கம் இருந்திருக்க முடியும். இப்படி எழுத்து , எழுத்து என மாய்ந்து போனதற்கு..

எனக்குத் தெரிந்து ஒரே நோக்கம் தான்

அவர் சொன்னதும் சொல்ல முயன்றதும் ஒன்றே ஒன்றைத் தான்.











நல்ல எழுத்துகள் படிக்க வேண்டும். நல்ல புத்தகங்கள் நிறைய வெளிவர வேண்டும். நல்ல புத்தகங்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும்






இளம் எழுத்தாளர்களை, இளம் கவிஞர்களை, நல்ல புத்தகங்களை எப்படியெல்லாம் அறிமுகம் செய்ய முடியுமோ அப்படியெல்லாம் செய்தார்






அவரது கட்டுரைகள், கதைகள், நாடகங்கள் எல்லாவற்றிலும் புத்தகம், புத்தகம் புத்தகம் தான்.

அவர் கற்றதும் பெற்றதும் கட்டுரைத் தொடரில் (அறிமுகப்படுத்திய புத்தகங்களைத் தான் நண்பர் கார்த்திக் சுப்பிரமணியன்(karthik.manian@gmail.com ) தொகுத்து தன் கைப்பட எழுதியதை இங்கே பதிந்து இருக்கிறேன்.



அவரால் வசீகரிக்கப்பட்டவர்கள் அவரால் புத்தகம் படிக்கும் பழக்கம் கொண்டவர்கள் என சுஜாதா ஓர் இயக்கம்.

அவரது மறைவுக்கு இரங்கல் எழுதிய எழுத்தாளர் திரு. இராமகிருஷ்ணன் சொன்னதை நினைத்துக் கொள்கிறேன், போய் வாருங்கள் வாத்யாரே.. எழுத்தாய் எப்போதும் இருப்பீர்கள்




அந்த வாத்யாருக்கு மாணவர்கள் செய்யும் வணக்கம் ஒன்றே ஒன்று தான். நல்ல புத்தகங்கள் படிப்பது. நல்ல புத்தகங்களைப் பற்றி செய்திகள் பகிர்ந்து கொள்வது. அதை ஒரு இயக்கமாகத் தொடர்வது

சுஜாதா சார்... WE ALL MISS YOU A LOT

Tuesday 17 February 2009

திரு.மாலன் அவர்களுக்கு எனது பதில்


திரு. மாலன் அவர்களின் ஜனகணமன  அதற்கு என் விமர்சனம், அதற்கு திரு. மாலன் அவர்களின் பதில்( என கடந்த பதிவுகள் 

திரு.மாலன் அவர்களுக்கு பதிலளிக்க வேண்டியது என் கடமை

மாலன் அவர்கள் நீண்ட கடிதத்தின் வாயிலாக சொல்ல விழைவது  தான் அந்தப் புத்தகத்தை எழுதியது 1980 எனவும் Manohar Malgonkar ன் புத்தகம் அதற்குப் பின் வெளியாகி இருக்கலாம் என்று யூகிப்பதாகவும் சொல்லியிருக்கார்

மாலனின் வரிகளை மீண்டும் பாருங்கள்

//நீங்கள் ஒரு THE MEN WHO KILLED GANDHI யைப் படித்து விட்டு எழுதுகிறீர்கள். MALGONKAR ருடைய அந்தப் புத்தகம் 1981ம் ஆண்டு வெளிவந்ததாக ஞாபகம். (நான் இன்றுவரை அதைப்படித்ததில்லை) ஆனால் நான் என் நாவலை 1980லேயே எழுதி விட்டேன்.81ல் அது பிரசுரமாகிவிட்டது//

1980 ல் தானே கூகிள் இல்லை இண்டெர்நெட் இல்லை . இப்போது இருக்கிறதே. எனக்கு மெயில் அனுப்புவதற்கு முன்பு  Manohar Malgonkar  என்பவர் The Men Who Killed Gandhi என்ற புத்தகத்தை எப்போது எழுதினார் என சரி பார்த்துவிட்டு எனக்கு மெயில் அனுப்பியிருக்கலாமே. இன்றைய தேதி மாலன் சீனியர் தானே

படிப்பவர்களுக்கு தெரிய வேண்டாமா

Manohar Malgonkar  என்பவர் The Men Who Killed Gandhi என்ற புத்தகத்தை  1978 லேயே வெளியிட்டுவிட்டார்.  அப்போதே  காந்தி கொலை தொடர்பாக  6 புத்தகங்கள் வந்துவிட்டன . ஆக மாலன் ஜனகணமன வெளியிடும் சமயத்தில் இந்தப் பொருளில் புத்தகங்கள் இருந்திருக்கின்றன

Manohar Malgonkar  எழுதிய  The Men Who Killed Gandhi சமீபத்திய பதிப்பு 2008 ல்


மாலன் அவர்கள் சொல்லியிருக்கும் சமாதானம் / விளக்கம்

//உங்கள் விமரிசனத்தில் நீங்கள் ஒன்றை மறந்து விட்டீர்கள். என்னுடையது Fiction வரலாற்றின் அடிப்படையில் அமைந்த Fiction.அதை நான் கதையைத் துவக்கும் முன் Prologueலேயே சொல்லி விட்டேன். ஒரு கதாசிரியனுக்கு சில உரிமைகள் உண்டு.எப்போதுமே சரித்திரத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதும் எந்த எழுத்தாளரும் தான் திரட்டும் எல்லாவற்றையும் எழுதிவிடுவதில்லை. கதையின் கட்டுமானம், இலக்கு இவற்றைக் கருத்தில் கொண்டு H/She will use his/her discretion.//

இது FICTION என மாலன் சொல்லியிருப்பது நிஜம். அதே Prologue ல் சம்பவங்கள் நிஜம் , சம்பாஷனைகள் தான் கற்பனை என்றும் ஒவ்வொரு விபரமும் சரி பார்க்கப்பட்ட பின்னரே எழுதியதாகவும் க்ளெயிம் செய்திருக்கிறாரே. சரி பார்த்தேன் எனச் சொல்லி வெளியிட்டால் அதிலே தப்பு இருந்தால் சொல்வது தானே விமர்சனம். அதைத் தானே செய்துள்ளேன்

இதையும் வாசகர்கள் கவனிக்க வேண்டும். 

ஆப்தே ஒரு பெண்ணுடன் சல்லாபித்திருந்தார் என பொதுவாகச் சொல்லவில்லை. ரேணு என்ற பெயரைச் சொல்லியிருக்கிறார்

அந்தப் பெண்ணின் பெயர் மனோரமா சால்வி என ஆதாரத்துடன் சொன்னால்  அது முக்கியமில்லை எனச் சொன்னால் என்ன சொல்வது

இன்னொன்று

ஆப்தே , கோட்சேயின் குவாலியர் பயணம். இதற்கு மாலன் தரும் சமாதானம் விளக்கம்

//உடனே டிரெயின் மூலம் ? நமக்கு அவர்கள் கிளம்பிய டிரெயினின் நேரம் தெரியாது. தில்லி வந்த நேரம் தெரியாது.தில்லி வந்து டிரெயின் மூலம் குவாலியர் போவதற்கு இடைப்பட்ட நேரத்தில் அவர்கள் போலீஸ் கண்ணில் படாமல் எங்கு தங்கியிருக்க முடியும்? அங்கே கற்பனைக்கு இடமிருக்கிறது அதை நான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். தப்பா?//

கோட்சேவும் , ஆப்தேயும் 27-ஜனவரி-1948 மும்பையிலிருந்து விமானம் மூலம் போலி பெயரில் டெல்லி வந்த உடன் விமான நிலையத்திலிருந்து நேராக பழைய டெல்லி ரயில் நிலையம் சென்று டிரெயினில் குவாலியர் போனது ஆப்தேவிடமும், கோட்சேவிடமும் பெறப்பட்ட ஸ்டேட்மெண்ட்களில் பதிவாகியுள்ளது. எந்த டிரெயின் என்ன நேரம் என்பது உட்பட

ஆக நமக்கு தெரியாது என்று மாலன் சொல்லும் நமக்கில் நான் சேர்த்தி இல்லை. 

தப்பா என மாலன் அவர்கள் கேட்கும் கேள்விக்கு என்ன பதில் சொல்லலாம் - வாசகர்களிடமே விட்டுவிடலாம்

அதே போல் 21-ஜனவரி-1948 ஜேடி நகர்வாலா என்ற அதிகாரி மொரார்ஜி தேசாயை பம்பாய் ரயில் நிலையத்தில் தான் சந்தித்தார். மாலன் எழுதியிருப்பது போல மொரார்ஜி தேசாயின் அலுவலகத்தில் இல்லை. இதற்கு மாலன் அவர்கள் பதில் சொல்லவில்லை

காந்தியின் கொலை அரசின் மெத்தனத்தால் என மாலன் ரமணன் மூலம் சொல்வதாகச் சொல்லியிருக்கார்

அதைத் தான் தீர்ப்பு சொன்ன நீதிபதி ஆத்ம சரன் சொல்லிருக்கார்னு தீர்ப்பு வரிகளை அப்படியே தந்திருக்கேனே

மாலனின் கீழ்கண்ட வரிகளைப் பாருங்கள்

//என்ன, மல்கோங்கர் ஆங்கிலத்தில் வரலாறாக எழுதினார். (என் உங்கள் குறிப்புக்களிலிருந்து நான் ஊகிக்கிறேன்) நான் தமிழில் சில பரிசோதனை முயற்சிகளோடு புனைகதையாக எழுதினேன். 

என்றைக்குமே தமிழ் எழுத்தாளனது முயற்சிகளுக்கு எளிதில் அங்கீகாரம் கிடைத்து விடாது. அது இளப்பமாகத்தான் கருதப்படும்.//


இதையும் மாலன் என்ற இன்றைய சீனியரிடம் நான் எதிர்பார்க்கவில்லை

திரு. மாலன் அவர்களின் பெருந்தன்மை


திரு. மாலன் அவர்களின் ஜனகணமன என்ற நூலுக்கு நான் எழுதிய விமர்சனம் இங்கே (http://mowlee.blogspot.com/2009/02/blog-post_14.html)

இதனை சுட்டி திரு. மாலன் அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். அவரிடமிருந்து ஒரு நீண்ட பதில் மின்னஞ்சல் வந்திருந்தது

அதனை இங்கே அப்படியே பதிகிறேன். திரு. மாலன் அவர்கள் எனது விமர்சனத்தை ஆங்காங்கே அப்படியே பதிந்து அதற்கு அவரின் பதிலையும் ஆங்காங்கே தந்திருப்பது மிக்க மகிழ்ச்சி. 

திரு. மாலன் அவர்களுக்கு மிக்க நன்றி. 
---
இனி திரு, மாலன் அவர்களின் மின்னஞ்சல் 

அன்புள்ள திரு. சந்திரமெளலீஸ்வரன்,

வணக்கம்.

ஜனகணமன பற்றிய தங்கள் விமர்சனம் கிடைத்தது. மிகவும் அக்கறை எடுத்துக் கொண்டு நூலை ஆராய்ந்திருக்கிறீர்கள் அதை விட முக்கியம், உங்கள் கருத்தை நூலெழுதியவருக்கு அனுப்பி அவரது கருத்தை அறிந்து கொள்ள மேற்கொண்டிருக்கும் முயற்சி.(நீங்கள் விமர்சிக்கிற எல்லா நூல்களுக்கும் இப்படி செய்கிறீர்களா அல்லது நான் 'வலை'யில் அகப்படுபவனாக இருப்பதால் எனக்கு இது நடக்கிறதா என அறிந்து கொள்ள ஆவல். எப்படி இருந்தாலும் மகிழ்ச்சியே. உங்கள்முயற்சிக்கு நன்றி.

என்னுடைய கோணத்திலிருந்து சில தகவல்கள். இவற்றை. விளக்கங்களாக ஏற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

1. "இந்த சின்னத் தகவல் இன்றளவில் கூகிளில் கோட்சே என்று தட்டினால் ஷண நேரத்தில் தகவல் வந்து விழுந்து விடும்."

நான் ஜனகணமனவை எழுதியது 1980ம் ஆண்டு. அதாவது 29 வருடங்களுக்கு முன்பு. அப்போது கணினி இ¨ணயம், கூகுள் எதுவுமே எனக்குப் பரிச்சயமாகியிருக்கவில்லை. என்னுடைய தேடுதலுக்கு நான் நூலகங்களையும் நூல்களையுமே சார்ந்திருக்க வேண்டியிருந்தது. அது க்ஷண நேர வேலை அல்ல. அப்போது இது குறித்து அதிக நூல்களும் இல்லை

2.ஜணகணமன அதே கால கட்டத்தில் தினமணிக் கதிரில் தொடராக வெளிவந்தது.(அப்போது நான் தினமணி ஆசிரியரல்ல)பத்திரிகைத் தொடர்கதைகளுக்கு உரிய சில வரம்புகளும் நிர்பந்தங்களுக்கும் உட்பட அதை எழுத நேர்ந்தது. என்ற போதிலும் அதில் பல சோதனைகளை செய்து பார்க்க முயற்சித்தேன். (ஒரே ஒரு கற்பனை பாத்திரம்.தியேட்டரிகல் உத்தி) என் முன் தலைமுறையில் நடந்த ஒரு அரசியல் நிகழ்வை என் அடுத்த தலைமுறைக்கு சொல்ல முற்படும் முயற்சி. (அதனால்தான் என் மகனுக்கு எழுதிய கடிதம்)

3.அதன் முதல் பதிப்பு 1988ல் வெளிவந்தது. கிழக்கின் பதிப்பாக நீங்கள் பார்ப்பது நான்காம் பதிப்பு.

4."சுதந்திர இந்தியாவின் முதல்பயங்கரவாதம்- காந்தியின் கொலைக்கு புத்தக ஆசிரியர் மாலன் தந்திருக்கும் ஓர் அடைமொழி." அட்டையின் முகப்பில் நீங்கள் காணும் வரிகள் என்னுடையது அல்ல. பதிப்பகத்தாருடையது. அந்த அட்டை வரியும் 'தீவிரவாதம்' என்றுதான் குறிப்பிடுகிறது  நீங்கள் குறிப்பிடுவது போல பயங்கரவாதம் என்றல்ல.

5."தன் குரலைச் சொல்ல சந்தர்ப்பம் தந்து மேல் முறையீடு செய்வதற்கும் வாய்ப்பளித்து May It Please Your Honour எனத் தொடங்கி சுமார் 140 பத்திகளுடைய ஒரு நீண்ட வாக்குமூலத்தைப் பதிவு செய்ய வாய்ப்பளிக்கும் பொறுமை பெற்றதாய் இருந்த்து அந்த சுதந்திரம்."அது ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற நீதிமன்ற நடைமுறை  

இனி உங்கள் கருத்துக்கள் மீது:

காந்தி மேற்கொண்ட கடைசி உண்ணாவிரதம் ரூ.55 கோடி விவகாரத்தினால் அல்ல, இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக என டைம்ஸ் ஆ·ப் இந்தியாவின் செய்தியின் காரணமாக நீங்கள் கருதுவதாகத் தெரிகிறது. அதற்கு அப்படி ஒரு கோணம் உண்டு. ஆனால் எனது கோணத்திற்கான ஆதாரமாகக் கருதுபவை:

1.மவுண்ட்பேட்டனின் Press attache ஆக இருந்த ஆலம் கேம்பல் ஜான்சனின் 12 ஜனவரி 1948க்கான நாட்குறிப்பு:

"During his talk with Mountbatten, Gandhi went out of the way to ask for a frank opinion about India's refusal to pay to Pakistan the fifty-five crores from the cash balances, which Mountbatten did not hesitate to give him, saying that he considered the step to be both unstatesmanlike and unwise  
காந்தி மவுண்ட்பேட்டனிடையே நடந்த இந்த சந்திப்பு, அவர் தனது பிரார்த்தனைக் கூட்டத்தை முடித்து விட்டு வந்த பின் நடந்தாக ஆலன் குறிப்பிடுகிறார். இந்த சந்திப்புக்கு காந்தியே முன் முயற்சி எடுத்ததாகவும் குறிப்பிடுகிறார்.

2.காந்தியின் கடைசி உண்ணாவிரதம் குறித்து லாரி காலின்ஸ் & டொமினிக் லாப்பியர் எழுதுவது: " But the fast also perplexed many, because unlike Calcutta, no out burst of violence had preceeded Gandhi's sudden decision to begin it. Delhi was tense, but the communal massacres in the city had stopped"

3.அதே ஆசிரியர்கள்: " Gandhi's decision to make the payment to Pakistan of its 550milllion rupees a condition for ending his fast also infuriated a wide segment of public opinion and divided the Indian Government"

4 அதே ஆசிரியர்கள்; Just before midday (Jan.13 1948) the members of that cabinet gathered around the man who was becoming again the conscience of India. Headed by Nehru and Patel, they had abandoned their sumptuous office buildings to hold a cabinent meeting around the charpai of the man who had opened the doors of those edifices for them.The subject that brought them to Gandhi's bedside was his demand for the payment of Pakistan's  550 million rupees.

இவற்றிலிருந்து நாம் வரக்கூடிய முடிவுகள்:

1.இந்தியா, பாகிஸ்தானுக்குரிய 55 கோடி ரூபாயை கொடுக்க மறுப்பது குறித்து காந்திக்கு மனஉளைச்சல் இருந்திருக்கிறது.
2.ஆனால் அதைக் குறித்து நிர்வாக ரீதியாக சில விஷயங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ள அவர் விரும்பியிருக்கிறார்.நேரு படேல் இருவரது கருத்திற்கு அப்பால் ஒரு Neutral Opinionஐ அவர் பெற விரும்பியிருந்திருக்கலாம். அந்தத் தெளிவு கிடைக்குமுன் அவர் பிரார்த்தனை கூட்டம் போன்ற ஒரு பொது நிகழ்ச்சியில் அது குறித்துப் பேசுவதை தவிர்த்திருந்திருக்கலாம்
3.அவர் உண்ணாவிரதம் ஆரம்பிக்கும் போது தில்லியில் பதற்றம் தணிந்திருந்தது
4.அவர் இந்து முஸ்லீம் பிரசினைக்காக ஏற்கனவே உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். எனவே அந்த ஒரு காரணம் மட்டும் அமைச்சரவையைப் பதற்றமடையச் செய்திருக்காது.
5.இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கான உண்ணாவிரதம் என்ற ஒன்று மட்டுமே அவரைக் கொலை செய்வதற்கான Provocationஆக கோட்சே-ஆப்தேக்கு இருந்திருக்காது


>>எட்டாம் அத்தியாயம் விஷ்ணு கர்க்காரே டெல்லிக்கு வந்தும் தனக்கு துப்பாக்கி கிடைக்கவில்லையே என அங்கலாய்க்கும் வரிகளுடனும் அதற்கு குவாலியர் பக்கம் தானே போய் வாங்கி வரலாம் என்ற சமாதனத்துடனும் முடிகிறது. இங்கேயும் தகவல்களில் முரண்பாடு. இரண்டாவது கொலை முயற்சிக்கு டெல்லிக்கு வரும் ஆப்தேயும் கோட்சேவும் தான் குவாலியர் போகின்றனர்<<

கர்காரே குவாலியர் போனதாக நான் எழுதியிருக்கிறேனா என்ன?

>>கோட்சேயும் ஆப்தேவும் தான் 27-ஜனவரி-1948 டெல்லிக்கு விமானத்தில் வந்த உடன் குவாலியருக்கு ட்ரெயின் மூலம் போய் தத்தாத்ரேய பர்சுரே என்பவரிடம் பெரட்டா என்ற இத்தாலிய மாடல் துப்பாக்கியை வாங்கி வந்தனர்.<<

உடனே டிரெயின் மூலம் ? நமக்கு அவர்கள் கிளம்பிய டிரெயினின் நேரம் தெரியாது. தில்லி வந்த நேரம் தெரியாது.தில்லி வந்து டிரெயின் மூலம் குவாலியர் போவதற்கு இடைப்பட்ட நேரத்தில் அவர்கள் போலீஸ் கண்ணில் படாமல் எங்கு தங்கியிருக்க முடியும்? அங்கே கற்பனைக்கு இடமிருக்கிறது அதை நான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். தப்பா?
 
குவாலியர் போகும் முன் அவர்கள் கார்க்கரேயை ரயிலடியில் சந்திக்கிறார்கள். இது கார்கரேயே சொன்னது

இந்தக் கதையை எழுதுவதற்காக நான் திரட்டிய பல விஷயங்களைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை:
உதாரணத்திற்குச் சொல்வதென்றால்:

  • தூக்கிலிடும் சில நிமிடங்களுக்கு முன் ஆப்தே மயங்கி விழுந்து விட்டான்.அவனைத் தூக்கு மேடைக்குத் தூக்கிக் கொண்டு போய்தான் கயிற்றை மாட்டினர்கள்.
  • அதே போல பாட்கே அப்ரூவராக மாறியது. அவனது வாக்கு மூலத்தை வைத்துத்தான் குற்றம் சாட்டப்பட்ட எண்மரில் எழுவர் தண்டிக்கப்பட்டனர். அதிலும் இருவர் (பார்சுரே, கிஸ்தயா) இருவரும் அப்பீலில் விடுவிக்கப்பட்டது.
  • சவார்க்கர் பற்றியும் அதிகம் எழுதவில்லை.அவர் போதுமான சாட்சியங்கள் இல்லை என்பதால் கீழ்க் கோர்ட்டிலேயே விடுவிக்கப்பட்டுவிட்டார்.
  • கோட்ஸே பெரி மேசன் நாவல்களின் விசிறி என்பது
  • இதைப் போல்தான் ஆப்தேயின் காதல் விளையாட்டுக்கள் பற்றியும் அதிகம் எழுதவில்லை. கதைக்குத் தேவையான அளவு மட்டும் பயன்படுத்திக் கொண்டேன்.
இதைப் பற்றியெல்லாம்/ இவர்களைப் பற்றியெல்லாம் நான் அதிகம் எழுதாதற்குக் காரணம் இது காந்தியைக் கொல்லத் திட்டமிட்டவர்களைப் பற்றிய நூல் அல்ல.
 
நான் சொல்ல விரும்பியது காந்தியைக் கொன்றது அரசாங்கத்தின் மெத்தனம். இது தொடர்பான பல விவரங்கள், விவாதங்கள் நூலில் இடம் பெற்றிருக்கின்றன.

கடைசியில் ரமணன் மனதில் ஓடும் எண்ணம்: 'காந்தியைக் கொன்றது கோட்சே இல்லை, அந்தக் கூட்டமில்லை. அரசாங்கம் அதன் மெத்தனம்' அநேகமாக இந்த வரியோடு கதை முடிகிறது.

 உங்கள் விமரிசனத்தில் நீங்கள் ஒன்றை மறந்து விட்டீர்கள். என்னுடையது Fiction வரலாற்றின் அடிப்படையில் அமைந்த Fiction.அதை நான் கதையைத் துவக்கும் முன் Prologueலேயே சொல்லி விட்டேன். ஒரு கதாசிரியனுக்கு சில உரிமைகள் உண்டு.எப்போதுமே சரித்திரத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதும் எந்த எழுத்தாளரும் தான் திரட்டும் எல்லாவற்றையும் எழுதிவிடுவதில்லை. கதையின் கட்டுமானம், இலக்கு இவற்றைக் கருத்தில் கொண்டு H/She will use his/her discretion.

>>ஹோட்டல் கிரீன் பேலஸில் ரூம் நம்பர் 212 ல் தங்கியிருந்ததாகச் சொல்கிறார் மாலன். ஆனால் அவர்கள் தங்கியிருந்தது SEA GREEN HOTEL

>>கோட்சே அப்படி நாமினேட் செய்தது ஜனவரி 13-1948.(Reference No:1) அவனும் ஆப்தேயும் சீ கிரின் ஹோட்டலில் தங்கியிருந்தது ஜனவரி 14 முதல் 17 வரை<<

>>கோட்சே பழைய டெல்லி ரயில் நிலைய ரிடயரிங் ரூமில் நாரயண ராவ் என்ற பெயரில் அறை எடுத்து தங்கியதாகச் சொல்கிறார் மாலன். ஆனால் கோட்சே விநாயக் ராவ் என்ற பெயரில் அறை எடுத்திருந்தான்<<

வரலாறு என்றால் நீங்கள் சுட்டுகிற இவையெல்லாம் பிழைதான்.ஆனால் ஒரு புனைகதையில் அவர்கள் ஒரு வசதியான ஹோட்டலில் தங்கினார்கள், மாற்றுப் பெயர்களில் தங்கினார்கள், என்ற தகவல்கள் போதுமானது. 
ஆப்தே சல்லாபி, கோட்சே நேர் எதிர் என்பதைத்தான் 3ம் அத்தியாயம் சொல்ல முயற்சிக்கிறது.

அதைக் காட்டத்தான் ஆப்தே பெண் சிநேகிதியுடன் குலாவிக் கொண்டிருந்த போது கோட்சே தனது சொத்தான இன்ஷீரன்ஸ் பாலிசிகளுக்கு இரண்டு பெண்களை பயனாளிகளாக நியமித்தான் என்ற தகவல் பயன்படுத்தப்படுகிறது . இங்கே தேதியா முக்கியம்?

மற்றப்படி-

ஆப்தேயும், கோட்சேயும் அம்பாலா சிறையில் தூக்கிலிடப்பட்டது நவம்பர் 15 1949 அதிகாலை. நான் எழுதியிருப்பது நவம்பர் 14 1949

காந்திக்கு வயது 75 அல்ல, 79 ஆகிய பிழைகளை நான் ஏற்கிறேன். அடுத்த பதிப்பில் திருத்திக் கொள்ள முயற்சிக்கிறேன்.
(இந்தத் தவறுகள் கதையை எந்த விதத்தில் பாதிக்கிறது என அறிய ஆவல்)

>>காந்தியின் கொலை மிக சமீபத்திய சரித்திரமே. இதற்கான ஆதரங்களை சேகரிப்பதில் மாலன் அவர்களுக்கு மிகுந்த சிரமம் இருந்தது என்று அவர் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கதை சொல்வதில், கதை சொல்லும் யுத்தியில் செலுத்திய கவனம் கதைக்கான ஆதரங்களை சேகரிப்பதிலும் அதை சரிபார்ப்பதிலும் காட்டவில்லை என்றே தோன்றுகிறது.<<

காயப்படுத்துகிறீர்கள் மெளலி. நான் இதை எழுதிய 1980ல் காந்தியின் கொலை பற்றிய விவரங்கள் அதிகம் ஊடகங்களில் விவாதிக்கப்பட்டிருக்கவில்லை. பாடப் புத்தகங்களில் கோட்சேயைப் பற்றித் தகவல் ஏதும் கிடையாது. கோட்சே கோர்ட்டில் அளித்த வாக்குமூலத்தைப் பார்க்க விரும்பினேன்.அது தடை செய்யப்பட்டிருந்தது. இங்கு எங்கும்கிடைக்கவில்லை. தில்லியில் நேரு நினைவு நூலகத்தில் இருப்பதாக அறிந்தேன்.

சென்னையிலிருந்து தில்லி போனேன். சென்னையிலிருந்து இரு இரவுகள் பயணம்.  எனக்கு தில்லியில் தங்க நண்பர்களோ உறவினர்களோ கிடையாது.விடுதியில்தான் தங்கினேன். இந்தி தெரியாது. ஆனாலும் போனேன். அதைப் படித்தேன். அன்று அங்கு xerox வசதி கிடையாது. குறிப்புகள் எடுத்தேன்.அது எவ்வளவு நெடிய ஆவணம் என்று நீங்களே சொல்லியிருக்கிறீர்கள். கோட்சே என்ற personalityயைப் புரிந்து கொள்ள அது உதவியது.(இன்று அந்த வாக்குமூலம் May it please your honour என்ற பெயரில் புத்தகமாக வந்திருக்கிறது)

பிர்லா ஹவுசை நேரில் சென்று பார்த்தேன். அன்று அதற்கு இன்று போல தீஸ் ஜனவரி மார்க்கிலிருந்து வாசல் கிடையாது. அருகில் உள்ள தீஸ் ஜனவரி லேனிலிருந்துதான் உள்ளே போக முடியும். ஆனால் அது ஏன் காந்தி மீதான முதல் முயற்சி தோற்றது என்பதைப் புரிந்து கொள்ள உதவியது

காந்தியைக் கொன்ற நேரத்தில் கோட்சே என்ன உடை அணிந்திருந்தான் என்ற தகவலைப் பல இடங்களில் தேடினேன்.அங்கிருந்த ஒரு பிபிசி ரிப்போர்ட்டர் ஒரு eye witness account எழுதியிருக்கிறார் எனத் தெரிய வந்தது. அவர் பெயர் வின்சென்ட் ஷீன் எனத் தெரிந்ததும் பிரிட்டிஷ் கவுன்சில் சென்று தேடினேன். அந்தப் புத்தகத்திற்கு கொலைக்குத் தொடர்பானது என்று ஊகிக்க முடியமல் ஒரு பெயர்: Lead Kindly Light. அது காந்தியைப் பற்றிய புத்தகம்.அவரது கொலையைப் பற்றியது அல்ல. ஆனால் அதில் அவர் கொலைச் சம்பவமும் வருகிறது. அதைப் படித்ததும் ஏன் ராணுவ அதிகாரிகள் அணிகிற உடையை கோட்சே தேர்ந்தெடுத்தான் என்ற கேள்வி எழுந்தது. அவனுக்கு ராணுவத்தில் சேர்கிற எண்ணம் சிறு வயதில் இருந்தது, அவனது தந்தை அதற்கு எதிராக இருந்தார் எனத் தெரிந்தது. ஏன் எதிராக இருந்தார் என்று பார்த்தால் அவர் மாமிசம் சாப்பிடுவதை விரும்பாத பிராமணர். இப்படி ஒன்றிலிருந்து ஒன்று.

லாப்பியர் சென்னை வந்தபோது அவரை சந்தித்து உரையாடி சில விஷயங்களைத் தெளிவு செய்து கொண்டிருக்கிறேன்.

இதையெல்லாம் ஒரு 15 அத்தியாய நாவல் எழுதுவதற்காக.அது எழுதப்பட்ட காலத்தில் கதை எழுதுகிறவர்கள் அப்படியெல்லாம் மெனக்கிடுவது கிடையாது. காரணம் இதில் அதிக சன்மானம் கிடையாது. அந்த சன்மானத்தையும் ஒரு Boy meets the girl கதை எழுதி சம்பாதிக்க முடியும். ஆனால் நான் அதைச் செய்யவில்லை.

நீங்கள் ஒரு THE MEN WHO KILLED GANDHI யைப் படித்து விட்டு எழுதுகிறீர்கள். MALGONKAR ருடைய அந்தப் புத்தகம் 1981ம் ஆண்டு வெளிவந்ததாக ஞாபகம். (நான் இன்றுவரை அதைப்படித்ததில்லை) ஆனால் நான் என் நாவலை 1980லேயே எழுதி விட்டேன்.81ல் அது பிரசுரமாகிவிட்டது.
 
என்ன, மல்கோங்கர் ஆங்கிலத்தில் வரலாறாக எழுதினார். (என் உங்கள் குறிப்புக்களிலிருந்து நான் ஊகிக்கிறேன்) நான் தமிழில் சில பரிசோதனை முயற்சிகளோடு புனைகதையாக எழுதினேன். 

என்றைக்குமே தமிழ் எழுத்தாளனது முயற்சிகளுக்கு எளிதில் அங்கீகாரம் கிடைத்து விடாது. அது இளப்பமாகத்தான் கருதப்படும்.

  .
>>மாலன் போன்ற சீனியரான ஒருவரிடம் இத்தனை சறுக்கல்களா என ஆச்சரியப் படுக்கிறேன்<< (sic)

இதை எழுதியபோது மாலன் சீனியர் அல்ல. அப்போது அவனுக்கு வயது 30. அப்போதுதான் பத்திரிகைத்துறையில் அடியெடுத்து வைத்திருந்தான்.இது அவனுடைய 2 வது நாவல்
 
இதை உங்கள் ப்திவில் வெளியிடுவீர்கள் என் நம்புகிறேன்

அன்புடன்
மாலன்

Saturday 14 February 2009

ஜனகணமன- நூல் விமர்சனம்










சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதம்- காந்தியின் கொலைக்கு புத்தக ஆசிரியர் மாலன் தந்திருக்கும் ஓர் அடைமொழி. ஆனால் சொல்ல மறந்த மொழி ஒன்று உண்டு.

இந்திய சுதந்திரத்துக்காக தன்னை முழுவதும் ஈடுபடுத்திக் கொண்ட அந்த மனிதன் தலைமையேற்றுப் பெற்றுத் தந்த சுதந்திரம் எந்த அளவில் இருந்தது என்றால், அந்த மனிதனைக் கொன்றவனுக்கும் தன் குரலைச் சொல்ல சந்தர்ப்பம் தந்து மேல் முறையீடு செய்வதற்கும் வாய்ப்பளித்து May It Please Your Honour எனத் தொடங்கி சுமார் 140 பத்திகளுடைய ஒரு நீண்ட வாக்குமூலத்தைப் பதிவு செய்ய வாய்ப்பளிக்கும் பொறுமை பெற்றதாய் இருந்த்து அந்த சுதந்திரம். அத்துனை நீளமான வாக்குமூலத்தைப் படித்தபின் கோட்சே நிச்சயம் மூச்சு வாங்கியிருக்க சாத்தியமுண்டு. வாங்கியிருப்பான். சுதந்திர இந்தியாவின் மூச்சுக் காற்று. அந்த 79 வயது கிழவரின் ஆன்ம மூச்சும் அந்தக் காற்றிலே கலந்து இருக்கும். அது கரைந்து போகும் மூச்சல்ல. ஆன்ம மூச்சல்லவா. பெரட்டா வகைத் துப்பாக்கி பிரசவித்த குண்டுகளில் சற்று நேரம் நின்று அந்த தேகத்தினுள்ளே உலாவிக் கொண்டிருந்த்தை துறந்து இந்த தேசத்தினுள்ளே வியாபித்து இன்னும் இருக்கும் மூச்சு. இன்னும் பல யுகம் இருக்கும் மூச்சு.. யுகங்கள் கடந்த் பின்னும் இருக்கும் மூச்சு.

எடுத்துக் கொண்ட வேலை புத்தக விமர்சனம். ஆனால் அதற்கு மேலே சொன்ன வியாஜ்ஜியம் புறம்பாக இருப்பது போலத் தோன்றலாம். ஆனால் ஜனகணமன என்ற நாமகரணம் கொண்ட இந்த குறுநாவல் மாலன் தன் மகன் சுகனுக்குச் சொன்ன பொலிடிக்கல் Fiction என்ற வருணனையோடும், மாலனின் வீட்டார் டைனிங்க் டேபிளில் காந்தியைப் பற்றி செய்த விமர்சனம் கலந்த உரையாடலுமான Preamble போன்றதான முஸ்தீபுகளும் நாமும் கொஞ்சம் அது மாதிரி பீடிகைகளோடு தான் இந்த விமர்சனத்தை தொடங்க வேண்டும் என்ற ஐடியாவை தந்ததையும் நேர்மையாக இங்கே சொல்லி விட வேண்டுமல்லவா அது தான்.


மாலன் தன் மகன் சுகனுக்குச் சொன்ன இந்த பொலிடிக்கல் ஸ்டோரியை மீண்டும் ஒரு கடிதத்துடனே நிறைவு செய்கிறார். ஆனால் தன் மகனுக்கு மட்டுமல்ல. இந்த புத்தகத்தைப் படிக்கும் எல்லோருக்குமே ஒரு தப்பான தகவலைச் சொல்கிறார். அது கோட்சே தூக்கிலிடப்பட்ட நாள். மாலன் தெளிவாக நவம்பர் பதினான்காம் தேதி என்று ஸ்பஷ்டமாக எழுதிருக்கார். ஆனால் கோட்சேயும் நாரயண ஆப்தே என்ற இன்னொரு குற்றவாளியும் தூக்கிலிடப்பட்ட்து நவம்பர் 15 1949.

இது ஒரு சின்ன சறுக்கல்தான் ஆனாலும் இந்த பொலிடிக்கல் ஸ்டோரியை சொல்வதற்கு தான் ரொம்பவே முயற்சி எடுத்துக் கொண்ட்தாக மாலன் முன்னுரையில் சொல்வதனால் இன்னும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்திருக்கலாம் எனச் சொல்ல வந்தேன்.

இந்த சின்னத் தகவல் இன்றளவில் கூகிளில் கோட்சே என்று தட்டினால் ஷண நேரத்தில் தகவல் வந்து விழுந்து விடும்.

சரிதான் விமர்சனம் என்றாலே குற்றம் கண்டுபிடிப்பது என்ற இலக்கணத்தில் இருக்கப் போகிறது என்று நினைக்க வேண்டாம்.

கதை இப்படித் தொடங்குகிறது

ரமணன் என்கிற போலிஸ் அதிகாரி ஒரு கனவு காண்கிறார். காந்தி கொல்லப்படுவதாக. தூக்கி வாரிப் போட்டு எழுந்து கொள்கிறார்.

சோம்பேறித்தனமாக இந்தப் புத்தகத்தை கையில் எடுக்கும் என் போன்ற ஆசாமிகளை டக்கென்று கதைக்குள்ளே தள்ளி வேக வேகமாக நகர்த்தி முற்றும் போட்டு நல்லா இருக்கே நடை என்ற திருப்தியுடன்(அந்த ஒரு திருப்திதான்) புத்தகத்தை மூட வைக்கிறார் மாலன்

கதை சொல்லும் சம்பிரதாயங்களில் தியேட்டர் டெக்னிக்கினைக் கையாண்டு கதை பல கோணங்களில் சொல்ல்படுகிறது. இழை துண்டாகமல் ஒட்ட வைத்திருக்கும் லாவகம் பிரமாதம்.


அவருடனே அத்தியாயம் அத்தியாயமாகப் பயணப்படலாம்

இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின் நடந்த கலவரங்கள். பாகிஸ்தானுக்கு 55 கோடி ருபாஉ இந்தியா தரவெண்டும் அதை முன்னிறுத்தி காந்தியின் உண்ணாவிரதம் இவற்றை சொல்லும் முதல் அத்தியாயம்.
காந்திக்கு 75 வயதாகிறது என்கிறார் மாலன். காந்திக்கு அப்போது வயது 79. காந்தியை ஒரு நாலு வயசு கம்மியாகப் பார்க்க மாலனுக்கு ஆசை.

இந்த 55 கோடி விவகாரத்தைப் பற்றிய சர்ச்சைகள் நிறைய உண்டு. கதை வடிவத்தில் இருப்பதால் அந்த சர்சைகளுக்கு மாலன் இடம் தராமல் கதையை நகர்த்திக் கொண்டு போவதில் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆனால் வரலாறு அல்லவா. ஜனவரி 13-1948 தேதியிட்ட இரண்டு அணா விலையிருந்த அன்றைய ”தி டைம்ஸ் ஆஃப் இந்தியா”வின் தலைப்புச் செய்தி

MAHATMA GANDHI STARTING FAST FROM TODAY


ஜனவரி 12 ம் தேதி மாலை காந்தியின் மாலை நேர வழிபாட்டு கூட்டத்தில் அவர் பேசியதை மேற்கோள்காட்டும் டைம்ஸ் அவர் இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காகவே உண்ணாவிரதம் மேற்கொள்வதாகச் சொல்கிறது

காந்தியக் கொல்ல கோட்சே முடிவெடுக்கும் தருணத்தை சுருக்கமாகவும் கொஞ்சம் விறுவிறுப்பாகவும் சொல்லும் இரண்டாம் அத்தியாயம்.


நதுராம் கோட்சே, நாரயண ஆப்தே, மதன்லால், விஷ்ணு கர்க்காரே ஆகியோரைப் பற்றிய சுருக்கமான வரிகளில் சில நறுக் இருக்கவே செய்கிறது. ஆப்தேயைப் பெண் பித்தன் எனசொல்லி விட்டு வேகமாக மதன்லால் பாவா பக்கம் தாவுகிறார் மாலன். மதன்லாலின் பூர்விகத்தைப் பற்றிய சில வரிகளிலேயே இவன் ரொம்பவே தீவிரமான ஆசாமி என புரியவைக்கிறார் மாலன்


விஷ்ணு கர்க்காரே பற்றி ஹோட்டலுக்கு சொந்தக்காரன் என்று நிறுத்திக் கொள்கிறார்

இந்த நாலு பேரும் இன்னொரு முக்கியமான ஆசாமியைச் சந்திக்கும் தருணமும் இந்த அத்தியாயத்தில்.



திகம்பர் ராமசந்திர பாட்கே.
“வித்தைக்காரனைப் போல வெளித் தோற்றமும் வேடிக்கைப் பேச்சுமாய் “ பாட்கேவுக்கு பொறுத்தமான வருணனை.
இந்த அத்தியாத்தின் ஹைலைட் நதுராம் கோட்சே காந்தியைக் கொல்ல ஜனவரி 20 1948 என நாள் குறித்துக் கொண்டு அதற்கான பயண ஏற்பாடாகா 17-ஜனவரி 1948 பம்பாயிலிருந்து டெல்லிக்குப் பயணிக்க ஏர் இந்தியாவில் தனக்க்கும் நாரயண ஆப்தேவுக்கும் விமான டிக்கெட் வாங்கும் சம்பவத்துடன் இந்த அத்தியாயம் முடிகிறது . நல்ல விறுவிறுப்பு



விமானப் பயணக் கட்டணம் (இரண்டு டிக்கெட் அன்றைக்கு 308 ரூபாய்) வரை மிகச் சரியாக சொன்ன மாலன், கோட்சே தனக்கு S.MARATHE என்றும் நாராயண ஆப்தேவுக்கு DN KARMAKAR என்றும் போலி பெயர் கொடுத்து டிக்கெட் வாங்கியதையும் சொல்லியிருக்கலாம். அந்த டிக்கெட்களின் படம் இங்கே.

பம்பாயிலிருந்து டெல்லிக்குப் புறப்படும் முன்பு நடந்த சில ஆயத்தங்களைச் சொல்லும் மூன்றாம் அத்தியாயம். இங்கேயும் மாலன் சில ஆதாரங்களில் கவனம் செலுத்தவில்லை எனச் சொல்லலாம்.
நாராயண ஆப்தேவும் நதுராம் கோட்சேயும் ஹோட்டல் கிரீன் பேலஸில் ரூம் நம்பர் 212 ல் தங்கியிருந்ததாகச் சொல்கிறார் மாலன். ஆனால் அவர்கள் தங்கியிருந்தது SEA GREEN HOTEL ; அறை எண் 6. அந்த ஹோட்டலின் படம் இங்கே

ஹோட்டலில் நாரயண ஆப்தே தனது கேர்ள் பிரெண்ட் ரேணுவை தருவித்து அவளுடன் சல்லாபித்திருப்பதாக மாலன் சொல்கிறார். அந்தப் பெண்ணின் தந்தை பம்பாய் போலிஸ் இலாகாவில் சர்ஜனாகப் பணி புரிந்த டாக்டர் ஒருவரின் பெண் என்கிற அளவுக்கு விவரம் சேகரித்த மாலன், அந்தப் பெண்ணின் பெயர் MANORAMA SALVI என்பதை எப்படி கவனிக்கத் தவறினார் எனப் புரியவில்லை. பின்னர் நடந்த விசாரணயில் அந்தப் பெண்ணிடம் பெறப்பட்ட வாக்குமூலம் இங்கே தந்துள்ளேன்.









ஆப்தே அந்தப் பெண்ணுடன் சல்லாபித்திருந்த தருணத்தில் கோட்சே ஓரியண்டல் லைஃப் இன்ஷூய்ரன்ஸ் கம்பெனியில் தனக்கிருந்த இன்ஷ்யுரன்ஸ் பாலிசிகளுக்கு வாரிசுகளை நியமித்துக் கொண்டிருந்ததாக சொல்கிறார் மாலன். கோட்சே அப்படி நாமினேட் செய்தது ஜனவரி 13-1948.(Reference No:1) அவனும் ஆப்தேயும் சீ கிரின் ஹோட்டலில் தங்கியிருந்தது ஜனவரி 14 முதல் 17 வரை. இங்கேயும் தேதியில் மாலன் கவனம் செலுத்தவில்லை

அத்தியாயம் நான்கு- அத்துனை சுவாரசியமான அத்தியாயமாக இல்லை. கொலையாளிகள் காந்தி தங்கியிருந்த பிர்லா மாளிகைக்கு வருவதில் முடியும் அத்தியாயம் இறுதி வரியில் திகம்பர பாட்கே அங்கே ஒரு ஒற்றைக் கண் மனிதனைப் பார்க்கும் ஒரு திகிலில் முடிச்சிட்டு நிற்கிறது.

கோட்சேயும் அவனது நண்பர்களும் காந்தி மீது 20-ஜனவரி-1948 நடத்திய முதல் கொலைத் தாக்குதலை மிகச் சுருக்கமாக அதே சமயம் விறுவிறுப்பாகவும் மாலன் விவரிக்கும் ஐந்தாம் அத்தியாயம்.
ஒரு ஜன்னல், கொலையாளிகள் கணக்கிட்டதை விட ஜாஸ்தி உயரத்தில் இருப்பதை கணக்கு வாத்தியார் ஆப்தே போட்ட திட்டத்தின் ஆரம்பமே சைபர் என்ற வார்த்தை சிக்கனத்தில் மாலன் சூழ்நிலையினைக் கண்முன்னே கொண்டு வருகிறார்.


கைக் குண்டு வீசி காந்தியைக் கொல்ல நடந்த அந்த முயற்சி, மாற்று ஏற்பாடுகளியும் நிறைவேற்ற இயலாத கொலையாளிகளின் ஏமாற்றம், மதன்லால் பாவா போலிசிடம் சிக்கியது; மற்றவர்கள் தப்பி ஓடியது என்று விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லாமல் இந்த சாப்டரை நகர்த்தும் மாலன், மாட்டிக் கொண்ட மதன்லால் பாவா மூலம் தங்களையும் போலிஸ் பிடித்து விடும் என கோட்சேயும் ஆப்தேவும் பயப்படும் ஒரு திகில் முடிச்சுடன் கொஞ்சம் மூச்சு விட நமக்கு சந்தர்ப்பம் தருகிறார்.

மாட்டிக் கொண்ட மதன்லால் பாவாவை போலிசார் விசாரிக்கும் சம்பவங்கள் ஆறாம் அத்தியாயம்.

இங்கே மதன்லால் பாவாவின் பேச்சு மூலம் அன்று நிலவி வந்த சூழலை மாலன் தத்ரூபமாக சொல்லியிருக்கிறார்.

மதன்லால் பாகிஸ்தானியனா என்ற போலிசின் சந்தேகத்திற்கு அவன் பதில், “ காந்தியைக் கொல்கிற அளவுக்கு பாகிஸ்தானிகள் பைத்தியக்காரர்கள் அல்ல. அவர்களுக்கு ஒரு தேசத்தை உருவாக்கிக் கொடுத்ததே அவர்தானே”

இந்தக் குற்றச் செயலில் இன்னும் சில பேர் இருக்கிறார்கள் என்பதை போலிஸ் யூகிக்கும் விதம் மாலனின் லாவகம்

“அரசியல் ? காந்தியைக் நீ கொல்ல விரும்பிய்தற்கு காரணம் அது தானா”

“ஆயிரக்கணக்கான பேர்களின் வயிற்றெறிச்சலை கொட்டிக் கொள்ளும் அவரின் செயல்கள் அரசியல் என்ற பெயருக்கு தகுதியுடைவைஎன்பது உங்கள் அபிப்ராயமானால், அப்படியே வைத்துக் கொள்ளலாம். நாங்கள் அவற்றை அந்த வார்த்தையால் அங்கீகரிக்கவில்லை”

“நீங்கள்?”

வாய்ச் சவடால் பேசப் போய், வார்த்தை தவறிவிட்டதை மதன்லால் உணர்ந்தான். இதோ ஒரு முக்கியமான தகவல் உதிர்ந்துவிட்டது. சே !

மதன்லாலைக் குடைந்த போலிசார், அவன் சகாக்கள் பழைய டெல்லி மெரினா ஹோட்டலில் ரூம் நம்பர் 40ல் தங்கியிருந்ததை தெரிந்து கொண்டு அங்கே விரைந்து போவதற்குள் கொலையாளிகள் திசைக்கொருவராயப் பறந்து விட்டனர் என்ற ஏமாற்றமும் சஸ்பென்சும் கலந்து ஒரு செகண்ட் நிற்கிறது இந்த அத்தியாயம். ஆனால் உடனே ஒரு குதிரை வேகத்தில் தொடர்கிறது. அறை எண் 40 காலி செய்து விட்டனர் கோட்சேயும் ஆப்தேயும். ஆனால் அந்த அறையில் போலிசுக்கு புதிய தடயம் கிடைக்கிறது.
மாலனின் வார்த்தைகள் அந்த தடயத்தை நறுக்கென்று சொல்கின்றன. “ பாகிஸ்தானுக்கு பணம் கொடுக்கச் சொன்ன காந்தியைக் கிழி கிழி என்று கிழித்திருந்த ஹிந்து மஹா சபையின் டைப் செய்த அறிக்கை. கையெழுத்துப் போட்டிருந்தவர் ஆசு தோஷ்லாகிரி. அதிலிருந்து லீட் கிடைத்து போலிசுக்கு ஒரு பத்திரிக்கையின் பெயரும் அதில் சம்பந்தப்பட்ட இரண்டு நபர்களின் பெயர்கள் கிடைக்கிறது. பத்திரிக்கை இந்து ராஷடிரா; அதன் ஆசிரியர் நதுராம் கோட்சே; பப்ளிஷர் ஆப்தே. போலிசுக்கு கோட்சேயும் ஆப்தேவும் வெறும் பெயர்களாக ஒரு புகை மூட்டம் போலத் தெரியவரும் இந்த இடத்தில் ஒரு கொக்கி போட்டு நிறுத்தியிருக்கலாம். ஆனால் மாட்டிக் கொண்ட மதன்லாலை கூட்டிக் கொண்டு டில்லி போலிசார் புலனாய்வில் இறங்கியதை இரண்டு நீளமான பாராக்களின் மூலம் சொல்லி கொஞ்சம் தொய்வு உண்டாக்குகிறார் மாலன்
இந்த அத்தியாயத்திலும் மாலன், தகவல் சேகரிப்பில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்
பழைய டெல்லி மெரினா ஹோட்டலில் கோட்சேயும் ஆப்தேயும் எம். தேஷ்பாண்டே மற்றும் எம். தேஷ்பாண்டே என போலி பெயரின் அறை எடுத்திருந்ததையும் சொல்லி இருக்கலாம். அதே போல அந்த ஹோட்டலின் மானேஜர் பசேகோ (Reference No:2) இதை விசாரணையில் சொன்னதை சொல்லி இருக்கலாம். அவர்கள் அறை எடுத்த ஹோட்டல் பில் இங்கே படமாக
விசாரணையில் உண்டான போலிசின் ஆயத்த பர்மாலிடிகளை கொஞ்சமாகச் சொல்லும் அத்தியாயம் ஏழு.

சுதந்திரம் வாங்கி சில மாதங்கள் மட்டுமே கடந்திருந்த நிலையில் ஆபிசர்களின் மனநிலையினை சிக்கனமான வார்த்தைகளில் மாலன் ,” வெள்ளைக்காரனுக்கு விழுந்து விழுந்து சலாம் வைத்தவர்கள் சுதந்திர இந்தியனுக்கு பதில் சொல்ல சோம்பல்படுகிறார்கள்”
கொலையாளிகளின் பூர்விகம் மராட்டிய மாநிலம் என்பதை போலிசார் மோப்பம் பிடித்தபின் புலனாய்வின் ஒரு பகுதி பம்பாய்க்கு தாவும் சுவாரசியத்துடன் இங்கே நிறுத்துகிறார் மாலன்
எட்டாம் அத்தியாயம்

காந்தி மீது 20-ஜனவரி-1948 நடந்த் கொலை முயற்சியின் பூர்விகம் மராட்டிய மண்ணில். அங்கே உள்துறை அமைச்சர் மொரார்ஜி தேசாய். அவர் இந்த விசாரணையை ஜிம்மி என்ற செல்லப் பெயர் கொண்ட ஜேடி நகர்வாலா என்ற பம்பாயின் டெபுடி கமிஷ்னர் ஆஃப் போலிஸ் வசம் ஒப்படைப்பது வரை சரியாக விசாரித்து எழுதியிருக்கிறார் மாலன். ஆனால் இங்கேயும் இரண்டு தகவல்களில் சின்ன சறுக்கல்.


மொரார்ஜி 21-ஜனவரி-1948 ஜேடி நகர்வாலா என்ற அந்த அதிகாரியிடம் இது பற்றி தனது அலுவலக்த்தில் விவாதித்தது போல் சொல்லியிருக்கிறார் மாலன். ஆனால் மொரார்ஜிக்கு தகவல் பேராசிரியர் ஜெயின் என்பவர் மூலம் தெரியவருகிறது. ஜெயின் மொரார்ஜியைச் சந்தித்து விட்டு கிளம்பியது மாலை 5 மணி. உடனே மொரார்ஜி ஜேடி நகர்வாலாவை அழைத்தார். ஆனால் ஜிம்மி என்ற செல்லப் பெயர் கொண்ட அந்த ஆபிசர் அப்போது பிசி. மொரார்ஜிக்கோ இரவு 8.30 மணிக்கு பம்பாய் செண்ட்ரல் ஸ்டேஷனில் குஜாராத் எக்ஸ்பிரசை பிடிக்க வேண்டும். எனவே அவர் ஜாம்ஷெட் டோரப் நகர்வாலா என்ற நீளமான பெயர் கொண்ட ஜேடி நகர்வாலாவை பம்பாய் செண்ட்ரல் ஸ்டேஷனுக்கு வரச் சொன்னார். மொரார்ஜி , ஜேடி நகர்வாலா சந்திப்பு பம்பாய் செண்ட்ரல் ஸ்டேஷனில் தான் 21-ஜனவரி-1948 நடந்தது. (Reference No 3)



அதே போல் இந்த கொலைத் திட்டத்தின் பூர்விகம் மராட்டிய மாநிலம் தான் என்பதை தனக்கு சொன்னது ஒரு டாக்டர் என ஜேடி நகர்வாலவிடம் மொரார்ஜி சொல்வதாக காட்சியமைத்திருக்கிறார் மாலன். மொரார்ஜியிடம் தகவல் சொன்னது டாக்டர் ஜெயின். ஆனால் எம்.பி.பி.எஸ் டாக்டரில்லை. பிஹெச்டி வாங்கிய முனைவர். ஜெயின். ஹிந்தி பேராசிரியர். அவரது வாக்கு மூலத்தின் முதல் இரண்டு பக்கங்கள் இங்கே

எட்டாம் அத்தியாயம் விஷ்ணு கர்க்காரே டெல்லிக்கு வந்தும் தனக்கு துப்பாக்கி கிடைக்கவில்லையே என அங்கலாய்க்கும் வரிகளுடனும் அதற்கு குவாலியர் பக்கம் தானே போய் வாங்கி வரலாம் என்ற சமாதனத்துடனும் முடிகிறது. இங்கேயும் தகவல்களில் முரண்பாடு. இரண்டாவது கொலை முயற்சிக்கு டெல்லிக்கு வரும் ஆப்தேயும் கோட்சேவும் தான் குவாலியர் போகின்றனர் 27-ஜனவரி-1948. அது அவர்களது திட்டத்தில் ஏற்கனவே முடிவான ஒன்று. ஆக இங்கே மாலன் சொல்லும் விஷ்ணு கர்க்காரேயின் புலம்பல் மாலனின் கற்பனனையாகத் தான் இருக்கவேண்டும். எப்படி என்று அத்தியாயம் பத்திற்கான விமர்சனத்தில் சொல்லியிருக்கிறேன்

ஒன்பதாம் அத்தியாயம் போலிசாரின் வலைவிரிப்பு நடவடிக்கைகள் பற்றி அத்துனை சுவாரசியமில்லாமல் நகர்ந்து டக்கென்று முடிகிறது


ஒன்பதாம் அத்தியாயத்திற்கும் பத்தாம் அத்தியாயத்திற்கும் நிறைய இடைவெளி.

பத்தாம் அத்தியாயம் கோட்சே பழைய டெல்லி ரயில்வே ஸ்டேஷனில் தூக்கத்திலிருந்து தூக்கிவாரி போட்டு எழுந்திருப்பது போல ஆரம்பிக்கிறார் மாலன்.

கோட்சேயும் ஆப்தேயும் ஏர் இந்தியா விமானம் மூலம் 27—ஜனவரி-1948 என். விநாயக் ராவ், டி.நாராயண் ராவ் என்ற போலி பெயர்களில் பயணித்ததை சொல்லி இருக்கலாம். அவர்கள் பயணித்த டிக்கெட் படம் இங்கே.
அவர்கள் இப்படி போலி பெயரில் பயணித்தனர் என்பதை பின்னர் நடந்த விசாரணையில் 27-ஜனவரி-1948 அந்த விமானத்தில் ஏர்ஹோஸ்டசாக இருந்த லோர்னா வுட்பிரிட்ஜ் என்ற மாதுவை பிப்ரவரி 1948 விசாரித்து போலிசார் ஊர்ஜிதப்படுத்தியதைச் சொல்லியிருக்கலாம்.( Reference No 4)
கோட்சேயும் ஆப்தேவும் தான் 27-ஜனவரி-1948 டெல்லிக்கு விமானத்தில் வந்த உடன் குவாலியருக்கு ட்ரெயின் மூலம் போய் தத்தாத்ரேய பர்சுரே என்பவரிடம் பெரட்டா என்ற இத்தாலிய மாடல் துப்பாக்கியை வாங்கி வந்தனர். இந்த பர்சுரே பெயர் கொலை வழக்கின் தீர்ப்பில் இருக்கிறது

கோட்சே பழைய டெல்லி ரயில் நிலைய ரிடயரிங் ரூமில் நாரயண ராவ் என்ற பெயரில் அறை எடுத்து தங்கியதாகச் சொல்கிறார் மாலன். ஆனால் கோட்சே விநாயக் ராவ் என்ற பெயரில் அறை எடுத்திருந்தான். (Reference No 5)
அத்தியாயம் 11, 12, 13, 14, 15 என வேகமாக தன் நடை வேகத்தால் கதையினை மிக லாவகாமாகக் கையாண்டிருக்கிறார் மாலன்.

காந்தியின் கொலை தவிர்த்திருக்கப்பட்டிருக்கலாம் என்ற போலிஸ் அதிகாரி ரமணனின் வருத்தத்துடன் கதை முடிகிறது. அது ரமணனின் வருத்தம் மட்டுமல்ல. மாலனின் வருத்தம் மட்டுமல்ல. மொத்த இந்தியாவின் வருத்தம்.


கொலை வழக்கை விசாரித்த நீதிபதி ஆத்ம் சரண் தீர்ப்பில் போலிசாரின் மெத்தனத்தை குறிப்பிட்டிருக்கிறார்


I may bring to the notice of the Central Government the slackness of the Police in the investigation of the case during the period between 20-Jan-1948 and 30-Jan-1948. The Delhi Police had obtained a detailed statement from Madanlal Phawa soon after his arrest on 20-Jan-1948. The Bombay Police had also been reported the statement of Dr. Jain that he had made to Hon’ble Morarji Desai on 21-Jan-1948. The Delhi Police and Bombay Police had contacted each other soon after these two statements had been made. Yet the Police miserably failed to derive any advantage from these two statements. Had the slightest keenness been shown in the investigation of the case at that stage the tragedy probably could have been averted

காந்தியின் கொலை மிக சமீபத்திய சரித்திரமே. இதற்கான ஆதரங்களை சேகரிப்பதில் மாலன் அவர்களுக்கு மிகுந்த சிரமம் இருந்தது என்று அவர் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியவில்லை.


கதை சொல்வதில், கதை சொல்லும் யுத்தியில் செலுத்திய கவனம் கதைக்கான ஆதரங்களை சேகரிப்பதிலும் அதை சரிபார்ப்பதிலும் காட்டவில்லை என்றே தோன்றுகிறது.


ஆதாரங்கள் சரி பார்க்கப்பட்ட பின்னரே தகவல்க்ள் பயன்படுத்தப்பட்டன என்ற மாலன் அவர்களின் க்ளெய்ம் மிகவும் மிகைப்படுத்தப்பட்ட கூற்று. தேதிகளில் முரண்பாடு, பெயர்களில் முரண்பாடு என நிறைய சறுக்கல்கள். திகம்பர பாட்கேவின் வேலையாள் சங்கர் கிஸ்தயா என்ற ஆளைப் பற்றி மாலன் கதையில் எங்கேயும் சொல்லவில்லை. இந்த ஆசாமி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் என்ற உண்மை மாலனின் சிரமமான தேடலில் கிடைக்கவில்லை என்பது ஆச்சரியமே


மாலனின் ஜனகணமன நாவலின் அட்டை, “ கோட்சே என்கிற மனிதனை ரத்தமும் சதையும் உயிரும் உணர்வுமாக இந்நாவல் படம்பிடிக்கும் அளவுக்கு வேறு எந்தப் படைப்பும் செய்த்ததில்லை” என்று சொல்வதும் மிகவும் மிகைப்படுத்தப்பட்டது என்றே சொல்ல வேண்டும்.


”ஒரே ஒரு இடம் நெருடுகிறது” என இதற்கு முன்னுரை எழுதியிருக்கும் பெருமதிப்பிற்குரிய கல்கி இராஜேந்திரன் அவர்களுக்கு இந்த விமர்சனம் மூலம் நான் சொல்லும் செய்தி “ நிறைய இடஙகளில் இடறுகிறது சார்”

இந்த புத்தகம் கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடு.

(http://nhm.in/shop/978-81-8368-021-9.html)

நல்ல காகிதம். படிக்க ஏதுவான் நேர்த்தியானஃபாண்ட். அளவான லைன் ஸ்பேசிங்க. பதிப்பகத்தாருக்கு எனது வாழ்த்துகள்.


ஒரு விண்ணப்பமும் : எனது இந்த விமர்சனத்தினை திரு. மாலன் அவர்களுக்கு அனுப்பினால் சந்தோஷப்படுவேன். அவர் அந்தக் கற்பனை ரமணனை வைத்து எமெர்ஜென்சி கால வரலாறு தொடர்பான நாவல் எழுதலாம் எனச் சொல்லியிருக்கார். அந்த நாவல் எழுதும் பட்சம் இன்னும் கொஞ்சம் கவனமாக இருக்கலாம் அல்லவா


மாலன் போன்ற சீனியரான ஒருவரிடம் இத்தனை சறுக்கல்களா என ஆச்சரியப் படுக்கிறேன்


இங்கே இந்த விமர்சனத்துக்காக நான் மேற்கோள் காட்டியிருக்கும் Reference எல்லாம் THE MEN WHO KILLED GANDHI – BY MANOHAR MALGONKAR (Rolli Books ) என்ற புத்தகத்திலிருந்து.


நான் ஜனகணமனவுக்கு விமர்சனம் எழுதப் போகிறேன் எனச் சொன்னவுடன் இந்தப் புத்தகத்தை உடனே எனக்கு அனுப்பிய என் நண்பர் கார்த்திக் சுப்பிரமணியனுக்கு நான் வெறுமனே நன்றி என்று சொன்னால் மட்டும் போதாது


Reference No1: THE MEN WHO KILLED GANDHI PAGE NO: 123
Reference No 2: THE MEN WHO KILLED GANDHI PAGE NO: 190-191
Reference No 3: THE MEN WHO KILLED GANDHI PAGE NO: 198
Reference No 4: THE MEN WHO KILLED GANDHI PAGE NO: 217
Reference No 5: THE MEN WHO KILLED GANDHI PAGE NO: 233

Monday 9 February 2009

குருஷேத்ரம்-அறிமுகம்


பகவத் கீதை இந்திய தத்துவ மரபில் மிக உயர்ந்த இட்த்திலிருக்கும் ஒரு உபதேசம். அதற்குக் காரணம் அது ஸ்ரீ க்ருஷ்ணரால் அர்ஜுனனுக்கு உபதேசிக்கப்பட்ட்தாக நாம் அர்த்தம் செய்து கொள்வதால்.


ஸ்ரீ க்ருஷ்ணனின் உபதேசம் அர்ஜுனனுக்கு மட்டுமில்லை. தடுமாறுகின்ற எல்லோருக்கும் தான்.


நம்முடைய சாதாரண அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ தடுமாற்றங்கள். சிலவற்றில் நமக்குத் தெரிகின்ற அளவில் முடிவெடுக்கிறோம். சிலவற்றில் முடிவெடுக்காமலே விடுகின்றோம். சிலவற்றில் மற்றவர்களிடம் ஆலோசனை கேட்கிறோம். ஆனால் எப்போதும் அந்தத் தடுமாற்றங்களை நிரந்தரமாக தள்ளிவைக்க முடியவில்லை


ஸ்ரீ க்ருஷணரின் உபதேசம் முழுமையும் அந்த தடுமாற்றத்தைப் பற்றிய ஆராய்ச்சி தான். அந்த தடுமாற்றத்தின் மூலத்தை நோக்கிய பார்வை தான்.


தடுமாற்றத்தைப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறவன் , ஒரு நிலையில் அந்த தடுமாற்றமே வராத நிலையினை எய்துகிறான். அப்படியான ஒரு நிலை எப்படி இருக்கும் !!! அதை முயன்று தெரிந்து கொள்ள ஒரு சிறிய முயற்சிதான் இந்த குருஷேத்திரம்


இதற்காக நான் அன்றாடம் நிகழும் சம்பவங்களையே உதாரணமாகக் கொண்டிருக்கிறேன். ஸ்ரீ க்ருஷ்ணர் இங்கே பஞ்சாயுதம் தாங்கி, துளசி மாலை அணிந்து வரப்போவதில்லை. அவருக்கு அந்த யுனிபார்மிலிருந்து கொஞ்சம் ஓய்வு தந்து அவரை நாம் தினசரி சந்திக்கும் ஒரு சராசரி மனுஷனாக காண்பிக்க முயற்சிக்கிறேன். அவரே தான் நான் எல்லாவற்றிலும் வியாபித்திருப்பவனே என்று சொல்லி எனக்கு இப்படி ஒரு சுதந்திரத்தை சமைத்துக் கொடுத்திருக்கிறாரே.


இந்தத் தொடரை வாரம் ஒன்று , இரண்டு வாரம் ஒன்று , மாசம் ஒன்று என்று எந்த கால அளவு நிர்ணயம் செய்தும் வெளியிட எண்ணமில்லை. எப்போதெல்லாம் ஸ்ரீ க்ருஷ்ணமந்திரம் கேட்பதாக எனக்குத் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் ஒரு பதிவு.